மெக்சிக்கோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பெண் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் இந்திய பெண் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் இருவர் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த இந்திய பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் இமாசலபிரதேசம் மாநிலம் சோலன் நகரில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வந்தவர் அஞ்சலி ரியோட் இமாசலபிரதேசத்தின் ஜேபி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி டெக் படித்து முடித்த அஞ்சலி ரியோட், முதுகலை பட்டப்படிப்புக்காக கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஜான் ஜோஸ் நகருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்ற இவர் புதுபுது இடங்களுக்கு பயணம் செய்து அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இணையத்தில் பகிர்வதில் ஆர்வமிக்கவராக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அஞ்சலி, தனது கணவருடன் மெக்சிகோவுக்கு சென்று அக்டோபர் 22ம் திகதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்து இருவரும் கடந்த 18ம் திகதி அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
உணவை முடித்துவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக இருவரும் காத்திருந்த போது அங்கு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் கண் இமைக்கும் நேரத்தில் அஞ்சலியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததாகவும்,அடுத்த சில நிமிடங்களில் தனது கணவர் முன்னே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.