இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லை தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், சீனா நேற்று முன்தினம் புதிய எல்லைகளுடன் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என சீனா அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி பிராந்திய இறையாண்மை மற்றும் தனது நாட்டின் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்த செயற்பாடாக இருந்தாலும் அதனை சீனா எதிர்க்கும் என கூறப்பட்டுள்ளது.
எல்லையை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவோர் மீது பதில் தாக்குதல் நடத்த இந்த சட்டத்தின் மூலம் சீனப் படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எல்லைகளில் நடைபெறும் ஆக்கிரமிப்பு, படையெடுப்புகள் போன்ற நடவடிக்கைகளை சீனா உறுதியுடன் எதிர்க்கும். அத்துடன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
ஏற்கனவே இந்திய எல்லை கிராமங்களில் சீனா, தனது பொதுவசதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதுடன் லடாக் பகுதியில் இந்திய – சீன இராணுவத்தினர் இடையில் மோதல் நடைபெற்ற வரும் சூழ்நிலையில் இந்தப் பிரிவு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை தவிர அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் எனவும் இந்த சீனா நிறைவேற்றியுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.