சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைகள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீன உர நிறுவனமான Qingdao Seawin Biotech Group என்னும் நிறுவனம், தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமராச்சியிடம் எட்டு மில்லியன் டொலர் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்ட்டுள்ளமை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சீன உர நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிபந்தனைக் கடிதமானது வெறுமனே ஒர் வர்த்தக முரண்பாட்டு நிலைமையாகும். இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான வர்த்தக ரீதியான முரண்பாட்டு நிலையாகும்.
இது எந்த வகையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீன உர நிறுவனம் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பிய விவகாரத்தினால் இலங்கைக்கு எவ்வித அவமானமும் ஏற்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.