ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர். இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.