அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் கோவிட் கட்டுப்பாடுகள், மாநில அரசின் பெருந்தொற்று மசோதா, தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இப்போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸை பதவி விலகும் படியும் பெருந்தொற்று மசோதா திரும்பப்பெறவும் கோரி மெல்பேர்ன் வீதிகளில் பேரணியாக சென்றுள்ளதுடன்,போராட்டக்காரர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பினை கொடியையும் ஏந்தி சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராகவும், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிராச்சார அமைப்பு நடத்திய போராட்டத்தில், தடுப்பூசிக்கு எதிரான மனநிலைக் கொண்டவர்களை எதிர்த்திருக்கின்றனர்.
“நீங்கள் மறைந்து கொள்ள முடியாது, நாஜிக்களை உங்கள் பக்கம் கொண்டிருக்கிறீர்கள்,” என்று இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிராச்சார அமைப்பு முழக்கங்களை எழுப்பியிருக்கின்றது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கோவிட் தடுப்பூசியையும்,89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர்.
இவ்வாறான சூழலில், கோவிட் தடுப்பூசிக்கு எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு அவுஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
“தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை கடைப்பிடிக்கும் அரசாங்கங்களை நாம் கொண்டிருப்பமே என்றால் இனி நாம் சுதந்திரமாக இருக்க முடியாது. நாம் சுதந்திரமான சமூகத்தில் வாழவில்லை, சிறைப்படுத்தப்பட்ட முகாமில் வாழ்கிறோம்,” என இப்பேரணியில் ஒருங்கிணைந்த அவுஸ்திரேலிய கட்சியின் தலைவரும் முன்னாள் தாராளவாத கட்சியின் அரசியல்வாதியுமான க்ரைக் கெல்லி தெரிவித்துள்ளார்.