சுவீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன், பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கூறிய அவா் எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாமல் ஒரே கட்சியின் ஆட்சியில் தான் பிரதமர் பதவியை வகிப்பேன் என நம்பிக்கை வெளியிட்டார்.
புதன்கிழமையன்று சுவீடனின் சட்ட நடைமுறைப்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று மக்டேலேனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுவீடனின் பெண் வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 100 வருடங்களுக்கு பின்னா் 54 வயதாகும் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மக்டேலேனா அண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.