24 மணித்தியாலமும் விவசாயிகளை ராஜபக்ச அரசு ஏமாற்றி வருகின்றது, விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் ஏன் இவ்வாறான அழிவை ஏற்படுத்துகின்றார்கள் என்று அரசிடம் கேள்வி எழுப்புகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம, காசிங்கம் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” தற்போது இரசாயன உரங்களை வழங்க முடியாது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக சுற்றறிக்கையை வெளியிட்டது ஏன் என அரசு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறான சுற்றறிக்கைகளை வெளியிட்டு விவசாயிகளை அரசு மீண்டும் ஏமாற்றியுள்ளது.
தரமற்ற உரத்தைக் கொண்டுவந்ததற்காக சீனக் கப்பலுக்கு நட்டஈடு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்பாவி விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு இந்த அரசு முயற்சிப்பதில்லை.
பண்டிகைக் காலம் அண்மித்திருக்கின்ற நிலையில் மக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் அனைத்துச் சலுகைகளும் அமைச்சர்களுக்கும் நண்பர்களுக்கும் மாத்திரமே கிடைக்கின்றது எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.