இலங்கையில் நடைமுறையில் உள்ள லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோக தடங்கல் டிசெம்பர் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே மூன்று கப்பல்களில் எரிவாயு கொள்கலன்கள் எடுத்து வரப்பட்ட போதிலும், அதில் இரண்டு கப்பல்களின் கொள்கலன்கள் இலங்கையின் தரநிர்ணயத்திற்கு உட்படவில்லை என்ற காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒரு கப்பலில் இருந்த கொள்கலன் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன. எனினும் அது சந்தையில் நிலவும் கேள்விக்கான நிரம்பலாக அமையவில்லை.
இந்த நிலையில் லிட்ரோ கொள்கலன்களை மற்றுமொரு கப்பல் அடுத்த வாரத்தில் இலங்கை கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரம் லாப் கொள்கலன்களை ஏற்றிய கப்பல் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதியே இலங்கைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய் கொள்வனவுக்காக காத்திருப்பதினை காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், லிட்ரோ எரிவாயு கொள்கலன் வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் வகையில் லிட்ரோ நிறுவனத்திடம் போதுமான ஒதுக்கத் தொகை இருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அணில் கொஸ்வத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.