2022ம் ஆண்டில் இலங்கை பாரதூரமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போதைய பொருளாதார நெருக்கடி 2022ல் தீவிரமடையும். நாம் பார்ப்பது போல், 2022 இல் அரசாங்க தேசிய வருவாயின் வளர்ச்சி எதிர்மறை அல்லது பூஜ்ஜிய அளவில் இருக்கும்.
மத்திய வங்கி பெருந்தொகை பணத்தை அச்சிட்டு பண விநியோகத்தை அதிகரிக்க அனுமதித்துள்ளது. டிசம்பர் 2019 முதல் அக்டோபர் 2021 வரையிலான காலப்பகுதியில், மத்திய வங்கி நாட்டின் பண விநியோகத்தை 3,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்தது.
இது 39 வீதம் அதிகரிப்பாகும். அதனால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது. 2022ல் அந்நியச் செலாவணி இல்லாததால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது.
ரூபாய் மதிப்பு பெரிய அளவில் சரிந்து வருகிறது. எனவே, அடுத்த ஆண்டு கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.