சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான Xi’an பகுதி மக்கள் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவின் Xi’an நகரில் செவ்வாய்க்கிழமை மட்டும் 175 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், பெரும்பாலானா மக்களுக்கு வீரியம் மிகுந்த, ஆபத்தான டெல்டா மாறுபாடு தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 13 மில்லியன் மக்கள் குடியிருக்கும் Xi’an நகரத்தில் மொத்தமாக கிருமி நீக்கம் செய்ய நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, அந்த 13 மில்லியன் மக்களும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மக்கள் கொரோனா சோதனை முன்னெடுக்க மட்டுமே தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டும் என நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே சென்று தேவையான உணவு பண்டங்களை வாங்கி வர அனுமதித்திருந்தனர்.
ஆனால் தற்போது, பாதிப்பு குறைவான பகுதியில் இருந்து மட்டும் மக்களை உணவுக்காக வெளியே செல்ல அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் இல்லாத நாடாக அறிவிக்கும் முனைப்பில் சீனா செயல்பட்டுவரும் நிலையில், திடீரென்று முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மொத்தமாக உறுதி செய்யப்பட்டு வருவது நகர நிர்வாகங்களை கடும் சிக்கலில் தள்ளியுள்ளது.
இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை நகர நிர்வாகம் செயல்படுத்திவருகிறது. Xi’an நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், பெரும்பாலான மக்கள் சமூக ஊடகத்தில் உதவி கோரி பதிவிட்டு வருகின்றனர்.
பலர் உணவின்றி பட்டினியால் தவிப்பதாக கதறியுள்ளனர். Xi’an நகரில் டெல்டா மாறுபாடு பரவலுக்கு பாகிஸ்தான் பயணி ஒருவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை முதல் Xi’an நகரம் முழு ஊரடங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை Xi’an நகரில் மட்டும் 810 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வூஹான் நகரில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் பின்னர் மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு Xi’an நகரிலேயே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் கிருமி நீக்கம் செய்யப்படாத வாகனங்கள் சாலையில் அடையாளம் காணப்பட்டால் 500 யுவான் (78.48 டொலர்) அபராதம் விதிக்கப்படுவதுடன் சாரதி 10 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நகர நிர்வாகத்தின் கொரோனா விதிகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.