அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக விமர்சனங்களை முன்வைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குறிப்பிடுவதை ஏற்க முடியாது. விமர்சனங்களை நாகரிகமான முறையில் முன்வைப்பது அவசியமாகும்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (10-01-2022 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் சர்வதேச உறவு பலவீனமடைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
வெளிவிவகாரக் கொள்கை மறுசீரமைக்கப்பட்டதை தொடர்ந்து பல நாடுகளுடன் அரசாங்கம் சிறந்த வெளிவிவகார கொள்கையினை பேணுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு உதவி வழங்க தென்கொரிய இணக்கம் தெரிவித்துள்ளதுடன், தென்கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு சந்தையினை விரிவுப்படுத்த அனுசரனை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு தீர்மானங்கள் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் மாதம் வெளியிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் அரச தலைவர்களும் இராஜதந்திரிகளும் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவார்கள். ஹங்கேரி நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.
18 ஆம் திகதி பிரித்தானியாவின் அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவும், 19 ஆம் திகதி கொரிய பாராளுமன்ற சபாநாயகரும், இம்மாதத்தின் இறுதி வாரத்தில் துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சரும் இலங்கைக்கு வருகை தரவள்ளனர். இலங்கை அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகவே செயற்படும்.
அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவதற்காகவே விமர்சனங்களை முன்வைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
விமர்சனங்கள் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தவதாக காணப்பட்டாலும் அது நாகரிகமான முறையில் அமைய வேண்டும்.
கருத்து சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கும், கட்சியின் கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது என்றார்.