இலங்கைக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கை சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடனுதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
பீய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உரையாற்றிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற கப்ராலின் கூற்று குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் சீனாவிடம் கோரப்படவுள்ள கடன் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கப்ரால் கூறியுள்ளார்.