ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாடசாலையை தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் ஒரு சிறுமியும் ஒரு பெண்ணும் காயமடைந்ததாக ஈராக் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் அமெரிக்க தூதரக பகுதி சேத விபரங்கள்குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
பாக்தாத்தின் டோரா பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஈரான் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஈராக் இராணுவ தளபதி அபு மஹ்தி அல் ஆகியோர் அமெரிக்க இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 2,500 வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.