எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்தடை அமுல்ப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அனல் மின் நிலையங்களில் எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ளதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின் தடைக்கு செல்ல வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
காலம், நேரம் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும்.சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் இன்று (22) பிற்பகல் எரிபொருள் தீர்ந்து போனதால் முற்றாக செயலிழந்தது.
இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் இருப்பு இன்று நண்பகலுடன் நிறைவடைய இருந்த போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மேலும் 600 மெற்றிக் தொன் எரிபொருளை நேற்றிரவு இலங்கை மின்சார சபையிடம் கையளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மின்கட்டமைப்பிற்கு 108 மெகாவோட் மின் இழப்பு ஏற்படுகிறது. வார இறுதியில் ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான மின்சாரத் தேவையினால் இன்றும் நாளையும் மின்வெட்டுத் தேவைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அனல் மின் நிலையங்களில் எண்ணெய் தீர்ந்துள்ளதால், வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.