நாட்டின் தற்போதைய அரசாங்கம் அவ்வப்போது புதிய, புதிய பரிசுகளை மக்களுக்கு வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பயிர் செய்கைக்கான பசளையை இரத்துச் செய்யும் பரிசு, வெடித்து சிதறும் சமையல் எரிவாயு கொள்கலன் பரிசு போன்ற பரிசுகளை வழங்கிய அரசாங்கம் மின் துண்டிப்பு என்ற புதிய பரிசை மக்களுக்கு வழங்க உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சம்மாந்துறை வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சௌபாக்கியத்தின் நோக்கு என்பதற்கு பதிலாக இருளின் நோக்கை அரசாங்கம் நடைமுறைபபடுத்தி வருகிறது. நாட்டின் தேசிய தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் அரசாங்கத்திடம் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் ஆகிய அனைத்து சுதந்திரங்களையும் அரசாங்கம் மீறி செயற்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் மக்களின் உரிமைகளை மீறி வரும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கும் யோசனையை அரசாங்கம் சுருட்டிக்கொள்ள நேரிட்டது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.




















