நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னர் 8 தடவைகள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளதுடன், இந்தக் கூட்டங்களுக்காக 73 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டங்கள் 5, 6, 7, 8, 19, 20, 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடைபெற்றுள்ளன.
எனினும், இந்த எட்டு கூட்டங்களிலும் நாட்டின் நெருக்கடிக்கு ஒரு உறுதியான தீர்வை முன்வைக்கவில்லையெனவும், நாட்டின் நெருக்கடி குறித்து பல நாட்கள் விவாதம் நடைபெற்றும் பயன் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதினை தொடர்ந்து கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன்,நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்காக மொத்தமாக ரூ.92 இலட்சம் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், மின்சாரம், தண்ணீர், எரிபொருள், போக்குவரத்து, உணவு, எழுதுபொருட்கள் போன்றவற்றை மதிப்பிட்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூடாத ஒரு நாளில் நாடாளுமன்றத்தின் நாளாந்த செலவு 87 இலட்சம் ரூபாவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.