இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பது தொடர்பாக ஆராயக் குழு ஒன்றை அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 இற்கான நகல் வரைபு தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்றைய கூட்டத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை முற்றாக நீக்கம் செய்யப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதைப் பிரதான சிங்களக் கட்சிகள் முன்வைத்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக நீக்குவதில் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் பெரியளவில் உடன்பாடுகள் இல்லை. வடக்குக் கிழக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை, இது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு என்றே கருதுகின்றன. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த உணர்வுகள் பிரதிபலித்திருந்ததை அறியக் கூடியதாக இருந்தது.
கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள்
சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஆகிய வடக்குக் கிழக்குக் கட்சிகள் கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை.
நகல் வரைபில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கபடவில்லையென தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எழுபது வருட இனப்பிரச்சினைக்குரிய தீர்வை முன்வைக்காமல் சிங்கள தேசம் தமக்குரிய அதிகாரங்கள் பற்றிப் பேசுகின்ற விடயங்களில் பங்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏலவே கூறியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசியல் யாப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டாலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணி உள்ளிட்ட சுயாதீன அணிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தன.
அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான ஜே.வி.பி பங்கொள்ளவில்லை. ஆனால் திருத்தங்களை நீதியமைச்சர் விஜயதாச ராஜபச்சவுக்கு அனுப்பியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
சர்வஜன வாக்கெடுப்புக்கு வழி வகுக்காத முறையில், நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் அங்கீகரிப்பதெனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நகல் வரைபு தொடர்பாக கட்சித் தலைவர்களின் கருத்துக்களை அறிவதற்காகவே இன்றைய கூட்டம் நடத்தப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் முறையிலேயே 21 அமைய வேண்டும். ஆனால் 19 பிளஸ் என்பதற்கு பதிலாக 19 மைனஸ்தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் காரசாரமாகச் சுட்டிக்காட்டினார்.
19 பிளஸ் முறையிலேயே 21 ஆவது திருத்தம்
19 பிளஸ் என்ற முறையிலேயே 21 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார். இதனை ஏனைய சிங்கள் கட்சிகளின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கமான 13 ஆவது திருத்தச்சட்டத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே 21 ஆவது திருத்தச் சட்டம் அமைய வேண்டுமென தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட மலையகத் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தின.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கும் ஏற்பாட்டில் தளர்வு போக்கை கடைப்பிடிக்கக்கூடாதெனச் சில சிங்களக் கட்சிகளின் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர். அத்துடன் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் உரிய முறையில் அமைய வேண்டுமெனவும் இல்லையேல் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிங்கள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தன. இன்றைய கூட்டத்தில் பங்கொள்ளாத கட்சிகளையும் உள்ளடக்கி மற்றுமொரு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் முன்றாம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபைத் தயாரிக்கும் விடயத்தில், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும், ரணில் விக்கிரமசிங்க நியமித்த குழுவும் கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளன.
குற்றம் சுமத்திய சட்டத்தரணிகள் சங்கம்
அமைச்சர் மூத்த சட்டத்தரணி விஜயதாச தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள், 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஜனாதிபதியின் சில அதிகாரங்களை அப்படியே பேணுவதாகச் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்துகின்றது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் இன்று முற்பகல் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் முறையிலேயே 21 அமைய வேண்டும். ஆனால் 19 பிளஸ் என்பதற்கு பதிலாக 19 மைனஸ்தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாதென ரஞ்சித் மத்தும பண்டார, ரணில் முன்னிலையில் காரசாரமாகச் சுட்டிக்காட்டினார்
குறிப்பாக, இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம், அமைச்சுப் பொறுப்புக்களை ஜனாதிபதி வைத்திருக்கும் அதிகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் 21 இற்கான நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகவே சட்டத்தரணிகள் சங்கம் வாதிடுகின்றது. இந்தவொரு நிலையில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கலாம் என்பது தொடர்பாக நகல் வரைபைத் தயாரிக்கும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் 2016 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள நாடாளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரங்களைப் பலப்படுத்தும் சரத்துகளும் உண்டு.
இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர்
குறிப்பாக இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் 91 (1) (xiii) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஆணைக்குழுக்கள் மீண்டும் சுயாதீனமாக செயற்படும் வகையிலான ஏற்பாடுகளும் உண்டு. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு ஆகியவற்றை மீண்டும் செயற்படுத்தும் நோக்கில் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகிய பிரதான ஆணைக்குழுக்கள் சுயாதீனமான முறையில் செயற்படும் வகையில் 21ஆவது திருத்த சட்ட வரைபில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, மற்றும் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டுமென்ற கனவுகள் இருப்பதால், 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்று 21 ஆவது திருத்தச் சட்டத்தையும் அங்கீகரித்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையைப் பாதுகாப்பதே பிரதான நோக்கம்
சுயாதீன ஆணைக் குழுக்களுக்கும், அரசியலமைப்புப் பேரவைக்கும் மற்றும் அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிப்பதனால் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதமரின் ஆலோசனைகளை ஜனாதிபதி கேட்க வேண்டுமென்ற கட்டாயமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் ஜனாதிபதி
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அரசியலமைப்புப் பேரவையில் ஜனாதிபதி, பிரதமர், சுபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அங்கம் வகிப்பர். இவர்களுடைய ஆலோசைனயின் பிரகாரம் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்காகப் பிரேரிக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நியமனத்தை வழங்குவார். பெயர் குறிப்பிடப்படும் ஐவரில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பர்.
ஏனைய மூவரும் துறைசார்ந்தோராக இருப்பர். இந்த அரசியலமைப்புப் பேரவையின் ஆலோசனையின் படியே ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களையும், ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு,தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு,எல்லை நிர்ணய ஆணைக்குழு,தேசிய பெறுகை ஆணைக்குழு, ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.
இதற்கான பரிந்துரை 21 ஆது திருத்தத்துக்கான நகல் வரைபில் முன்வைக்கப்பட்டுள்ளன. சட்டமாதிபர், மத்திய வங்கியின் ஆளுநர், கணக்காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், குறைகேள் அதிகாரி மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஆகிய உயர் பதவிகளுக்கான நியமனத்தின்போதும் ஜனாதிபதி அரசியலமைப்புச் சபையின் ஆலோசைனகள் எதுவுமின்றிச் செயற்பட முடியாது.
இந்தப் பரிந்துரைகள் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரமே 21 ஆவது திருத்த நகல் வரைபில் உள்ளடங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்புப் பேரவையில் ஐந்து உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதிக்கும் இருக்கும் அதிகாரம் ஐவர் கொண்ட அரசியலமைப்புப் பேரவையைச் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்குமா என்பது கேள்வியே.
அதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழு முன்வைத்துள்ள நகல் வரைபு யோசனைகளிலும், இலங்கைச் சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலும் மாகாண சபைகளுக்கான ஆளுநர்கள் நியமனம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. 20 மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கான ஆளுநா்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்கள் மூலமே நியமித்திருந்தார்.
இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குத் தெரிவு செய்யப்படும் ஆளுநர்கள் ஜனாதிபதியின் விசுவாசிகளாகவும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவோராகவுமே செயற்பட்டு வந்தனர்.
ஆகவே 21 ஆகவே திருத்தச் சட்ட நகல் வரைபில் மாகாண ஆளுநர்களின் நியமனங்களை அரசியலமைப்புப் பேரவையின் மூலமாகத் தெரிவு செய்யும் முறை அல்லது மாகாண முதலமைச்சர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆளுநர்களை நியமிக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால் அது குறித்த பாிந்துரைகள் எதுவும் நகல் வரைபில் இல்லை.
21 ஆவது திருத்த நகல் வரைபு இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல!
21 ஆவது திருத்த நகல் வரைபு எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனாலும் அந்தத் திருத்தத்திற்குள் உட்புகுத்தப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்று மாகாண ஆளுநர்கள் நியமன முறையிலும் சுயாதீனத் தன்மையைப் புகுத்தியிருக்கலாம்.
ரணில் விக்கிரமசிங்க. சஜித் பிரேமதாச, பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டுமென்ற கனவுகள் இருப்பதால், 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்று 21 ஆவது திருத்தச் சட்டத்தையும் அங்கீகரித்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையைப் பாதுகாப்பதே பிரதான நோக்கம் என்பது இன்று இடம்பெற்ற கூட்டத்தில் தெளிவாகியிருக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டம் சென்ற 23 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது, 21 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான நகல் வரைபு நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.