பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த உக்ரைன் அழகிக்காக மனைவியைக் கைவிட்ட பிரித்தானியர், இனி அவரை தொடர்பு கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைனிலிருந்து அகதிகளாக பிரித்தானியாவுக்கு வந்தவர்களுக்கு பிரித்தானியர்கள் பலர் தங்கள் வீடுகளில் இடமளித்தனர்.
அப்படி, சோபியா (Sofiia Karkadym, 22) என்ற பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடம் கொடுத்தனர் டோனி (Antony Garnett, 29) லோர்னா (Lorna, 28) தம்பதியர். ஆனால், சோபியாவுக்கு தன் மனதிலும் இடம் கொடுத்துவிட்டார் டோனி. ஆம், சோபியா வந்த 10 நாட்களிலேயே அவருக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொள்ள, வீட்டிற்குள் இரண்டு பெண்களும் முட்டிக்கொள்ள, சோபியா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்பாடா, தொல்லை ஒழிந்தது என லோர்னா பெருமூச்சுவிட, அவர் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. ஆம், சோபியாவுடனே நானும் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூறி, மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு சோபியாவுடன் வேறொரு வீட்டில் குடியேறிவிட்டார் டோனி.
இதற்கிடையில், டோனி தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி இடையூறு செய்வதாக நீதிமன்றம் சென்றுள்ளார் லோர்னா.
அதைத் தொடர்ந்து, தன் முன்னாள் மனைவியான லோர்னாவை டோனி நெருங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்ந்த Bradfordஇல் அமைந்துள்ள வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தொலைவுக்குள் டோனி நுழையக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், தானும் இனி டோனியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடமாட்டேன் என்று தெரிவித்துள்ள லோர்னா, இதற்கு முன் வெளியிட்ட செய்திகளையும் நீக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், டோனிக்கும் லோர்னாவுக்கும் பிறந்த பிள்ளைகள் இருவரின் நிலை என்ன என்று தெரியவில்லை.