எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றிரவு டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் டீசல் விநியோகம் தொடங்கும்.ஆனால் கூப்பன்களை விநியோகிக்க இராணுவம் இல்லை.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ள இராணுவத்தினர்
கடந்த காலங்களில் இராணுவத்தினர் கூப்பன்கனை வழங்கி வந்த நிலையில்,தற்போது எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் இல்லை.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,கடந்த நாட்களை போல இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடாவிட்டால் எரிவாயு நிலையங்களில் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மேற்கு மாகாணத்தில் 320 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 180 வண்டிக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடையும் எரிபொருள் கப்பல்
மேலும்,எரிபொருளை ஏற்றிக்கொண்டு மேலும் மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையை வந்தடைய உள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தலா 40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களும், 35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பலும் வருகின்றன.
இம்மாதம் 21ஆம் திகதி 31,500 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு கப்பலொன்றும், 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலொன்றும் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடையும் எரிபொருளை எரிபொருள் நிலையங்களில் அமைதியான முறையில் வழங்க இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.