அடுத்த 2-3 மாதங்களில் இலங்கையில் அதிகமான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்( (UNFPA) தெரிவித்துள்ளது.
(UNFPA) அமைப்பு, ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான 3 மாத மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை சுகாதார அமைச்சகத்திடம் இன்று ஒப்படைத்தது.
இந்த நிலையில், UNFPA இன் கூற்றுப்படி, இலங்கையின் சமூக,பொருளாதார நெருக்கடியானது பொது மருத்துவமனைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் நிலை
மேலும் அடுத்த 2-3 மாதங்களில் அதிக மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தாய்வழி சுகாதாரம் மற்றும் கருத்தடைக்கான அணுகல் உள்ளிட்ட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதை கடுமையாக பாதிக்கின்றது.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்கள் இல்லாததால் 215,000 கர்ப்பிணிப் பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். அவர்களில் 11,000 பேர் இளம்பெண்களாவர் என்று UNFPA நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக UNFPA அமைப்பு, இலங்கையில் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களில் 2 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் தேவைகளை அடைவதற்கு கூடுதலாக 10.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.