யாழ்.நகரை அண்டிய பகுதியில் கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீவைக்கப்பட்ட குடும்பஸ்தர் ஆபத்தான வகையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி கைது
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், படுகாயங்களுக்கு உள்ளாகிய குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியே கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார். அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது.
கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.
இந்நிலையில் இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்.நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபரான பெண்ணை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.