பிரான்ஸில் பெற்றோல் விநியோகம் பாதிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே கார்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
எண்ணெய் நிறுவனங்களால் நடத்தப்படும் சுத்திகரிப்பு ஆலைகளில், குறிப்பாக டோட்டல் எனர்ஜிஸ், எக்ஸான்மொபில் நிறுவன ஊழியர்கள், ஊதியம் வழங்கல் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஊழியர் சங்கம் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தி 60 சதவீதத்துக்கும் அதிகம் சரிவை சந்தித்துள்ளது.
தற்போது, டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரான்சில் பெரும்பாலான நிலையங்களில் பெற்றோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த ஒரு நபர், தன்னை முந்திச்செல்ல இன்னொரு நபர் முயன்றதால், ஆத்திரத்தில் அந்த நபரை கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைடையே, பிரான்ஸ் அரசாங்கம் அதன் குடிமக்களிடையே ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்ய முயன்று வருகிறது.
பிரான்ஸ் அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடனடியாக தீர்க்க வலியுறுத்தியுள்ளது