20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் அணியின் நூருல் ஹசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
20க்கு 20 கிரிக்கெட் உலககிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் மோதின.
கிரிக்கெட் போட்டி
பரப்பரப்பான இந்த ஆட்டத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 185 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக துடுப்பெடுத்து ஆடினார்.
அவர் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பு இன்றி 66 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
எனினும் சீரற்ற வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதுடன் மழை நின்ற பின்னர் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது இந்திய அணி சிறப்பாக பந்து வீச இறுதியில் 5 ஓட்டங்களால் வெற்றியை பெற்றது.
போலியான களத்தடுப்பு
இந்நிலையிலே விராட் கோலிக்கு எதிராக போலியான களத்தடுப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் இந்த நடவடிக்கை சர்வதேச கிரிகெட் பேரவையின் விதிகளுக்கு முரணாணது எனவும் அதற்காக பெனால்ட்டி முறையில் 5 ஓட்டங்கள் வழங்கியிருக்க வேண்டும் எனவும் நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.
போட்டியின் போது ஏழாவது ஓவரை இந்திய அணியின் அக்சார் பட்டேல் வீசியிருந்தார்.
இந்த ஓவரின் 3-வது பந்தை லிட்டன் தாஸ் மிட் விக்கெட் ஆஃப் திசையில் அடித்தார்.
பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் காப்பாளரிடம் வீசினார்.
எனினும் இதன்போது விராட் கோலி பந்தை பிடித்து வீசுவது போல் சைகை செய்தார். இது போலியான களத்தடுப்பு ஆகும்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் பார்த்தால் பெனால்டியாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.