கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியாந்தினி கமலசிங்கத்திற்கு எதிராக பிரதேச மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டம் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக நடத்தப்பட்டிருக்கின்றது.
மதுபோதையில் வைத்தியம் பார்க்காதே
ஆர்ப்பாட்டத்தின்போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே என பாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டிந்தார்கள்.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் வருகைதந்து போராட்டக்காரர்களின் கருத்துக்களை செவிமடுத்ததுடன், இனி இதுபோன்ற பிரச்சனைகள் இடம்பெறாது என உறுதிமொழியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.
இதன்போது போராட்டத்தை மேற்கொண்டு இருந்த பெண்கள் கருத்து தெரிவிக்கும் போது, கர்ப்பிணி தாய்மார்களுடன் மிக மோசமான வார்த்தை பிரயோகங்கள் பாவிப்பது தாதியர்களுடன் முரண்படுவது, என பல குறைபாடுகள் உள்ளன.
அதற்குமேல் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒருவரிடம் நாங்கள் எப்படி சிகிச்சை பெறுவது? எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதேவேளை கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.