தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டியுள்ள வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப்பகுதி, நவம்பர் 19ம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் ஏதுநிலை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். அதேநேரம் நாட்டின் ஏனையப் பகுதிகளில் சீரான வானிலை நிலவும். சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது