பாரிய நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் டுபாயில் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
குறித்த வியாபாரத்தை தனது பெயரிலேயே அவர் பதிவு செய்துள்ளார் என கோட்டை நீதவான் திலின கமகேவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
கோடீஸ்வர வர்த்தகர்களிடம் மோசடி செய்த பணத்தை சந்தேகநபர் டுபாய் நாட்டில் வர்த்தகம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸ் மற்றும் மத்திய வங்கி ஊடாக தகவல் கோரியுள்ளளனர்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் குறிப்பிடப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதவானிடம் சுருக்கமான ஆதார அறிக்கையை தாக்கல் செய்தது.
அதற்கமைய, பிரதான சந்தேகநபர் திலினி பிரியமாலிக்கு எதிராக 19 சாட்சியங்களும், பொரளை சிறிசுமண தேரருக்கு எதிராக 5 சாட்சியங்களும், ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக 6 சாட்சியங்களும், இசுரு பண்டாரவுக்கு எதிராக 3 சாட்சியங்களும் உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இது ஒரு சிக்கலான விசாரணை எனவும் அசாத் சாலி ஆரம்பத்தில் 10 கோடி ரூபாயும் பின்னர் 15 கோடி ரூபாயும் ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கியதாகவும் இது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதுதவிர திலினி பிரியமாலிக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் இசுரு பண்டாரவின் கணக்கில் 100 லட்சம் ரூபாவை வரவு வைத்துள்ளதோடு, திலினி பிரியமாலி தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தங்கப் பொருட்களை அடகு வைப்பதற்கும் அவரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுக்கமைய திலின பிரியமாலியின் வீடு சோதனையிடப்பட்டதில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தங்க நகைகள் தொடர்பான அடமானப் பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.தங்க நகை அடங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பதை இதுவரையில் வெளிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களான திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும் கசுன் ஹர்ஷன ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.