ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அதன் கூட்டணிக்கட்சிகள் கலந்துக்கொள்ளவில்லை.
நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் எவரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள்
நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
தாமோ, தமது கட்சியின் சார்பில் நிறைவேற்றுக்குழுவில் அங்கம் வகிப்போரோ கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
தேச விடுதலை மக்கள் கட்சியின் செயலாளர் டி. கலங்சூரிய, மக்கள் ஐக்கிய முன்னணி செயலாளர் திஸ்ஸ ஜயவர்தன யாப்பா, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஏ.எம்.எம்.அதாவுல்லா ஆகியோரே மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாக நேரிடும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாப்பை ஆராய்ந்த போது, முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல், முன்னணியின் தலைவர் நிறைவுற்றுக்குழு கூட்டத்தை கூட்டுவது சட்டவிரோதமானது என அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
யாப்புக்கு எதிரான கூட்டத்தை நடத்துவதால் பல சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக்கட்சிகள் என்ற வகையில் தாமும் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளாக முன்னிலையாக நேரிடும் என்பதால், கூட்டத்தை இரத்துச் செய்யுமாறு கடிதத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.