போதைப் பொருள் பயன்படுத்தி குற்றச்சாட்டின் கீழ் சிறைக்கு செல்லும் சாதாரண தரம் மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
16 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டவில் போதைப் பொருள் பயன்படுத்தி குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரமாக இருந்ததுடன் தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தால் அதிகரித்துள்ளது.
இவ்வாறு சிறையில் அடைக்கப்படும் மாணவர்கள் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். இதனடிப்படையில் கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது, பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகுவது மிக வேகமாக அதிகரித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் போதைப் பொருள் குற்றங்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட நபர்கள் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். எனினும் தற்போது அந்த வயதெல்லையானது 22 முதல் 30 வயது வரை குறைந்துள்ளது.
இதனை தவிர போதைப் பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 22 பட்டதாரிகள், 2020 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாடசாலைக்கு செல்லாத 600 பேர் 2015 ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 190 ஆக குறைந்தது எனவும் சந்தன ஏக்கநாயக்க மேலும் கூறியுள்ளார்.
பெரும் சமுதாய சீரழிவு ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கையில் ஐஸ்,ஹெரோயின் உட்பட பல விஷ போதைப் பொருட்கள் வேகமாக பரவியுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப் பொருள் பல இடங்களில் வேகமாக பரவி வருவதுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவி வருவதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பெரும் சமுதாய சீரழிவு ஏற்படும் எனவும் அது நாட்டின் முழு எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.