கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 4) சவரனுக்கு ரூ.352 உயர்ந்து, ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
ஏற்ற இறக்கம் கண்ட தங்கவிலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் திகதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்த ஆண்டு ஜன.27-ம் திகதி முதல் 31-ம் திகதி வரை ஒரு பவுன் ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையாகி வந்தது.
அதிலும் குறிப்பாக, பிப்.2-ம் திகதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது. அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 5-ம் திகதி தங்க விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.
அட்சய திருதியை
அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து இருந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை இந்த ஆண்டின் இதுவரையில் அதிக பட்சமாக சவரனுக்கு 728 அதிகரித்து ரூ.45,648 விற்பனையானது.
இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,696-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.00 உயர்ந்து ரூ.82.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.82,800-ஆக இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி புதன்கிழமை தனது வட்டி விகிதத்தை மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதன் காரணமாக பங்குச்சந்தைகளில் நிலையில்லாத தன்மை நிலவி வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.