கிழக்கிலுள்ள தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் (2024) மீள கையளிப்போம், இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (24) நாடாளுமன்றில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்
“வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக சாணக்கியன் முன்வைக்கும் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது.
எங்களிடமுள்ள தகவல்களுக்கமைய குருக்கள்மடம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தின் பின்னரே வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின்னர் இராணுவ படைப் பிரிவொன்றின் தலைமையகம் இந்த இடத்திலே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாமுக்கு வெளியில் குறித்த மைதானம் உள்ளது, அதற்கு அருகில் இரண்டு ஏக்கர் அளவிலான இராணுவ முகமொன்றே உள்ளது.
இனவாதத்தை இணைக்க வேண்டாம்
கிழக்கில் இதற்கு முன்னர் 44,980 ஏக்கர் இராணுவத்தினர் வசமிருந்தது. இதில் 90 வீதத்திற்கும் அதிகமான காணிகள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இராணுவத்தினரிடம் 7,379 ஏக்கர் காணிகளே காணப்படுகின்றது.
இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன, 7,342 ஏக்கர் அரச காணிகளாக உள்ளன.
தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன்.” என்றார்.