யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் கடைச்சூழலினை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தினை தனது ஊடக அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோய் பரவல்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரவினர், யாழ். மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் கடந்த (23.01.2024) ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி நகர்ப்புறங்களில் உள்ள கடையுரிமையாளர்கள் சுகாதார பிரிவினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய 61,631இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வர்த்தக சங்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி தயாரிக்கப்பட்டு வர்த்தக சங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட செவ்வை பார்க்கும் பட்டியலுக்கு அமைவாக எதிர்வரும் (2024.01.27) ஆம் திகதி சனிக்கிழமை சமூகப் பொறுப்புடன் தங்கள் தொழில் முயற்சிக்குரிய கட்டடம், காணி மற்றும் சுற்றுச்சூழலினை நுளம்பு பெருகாதவாறு துப்பரவு செய்யுமாறும் தொடர்ந்தும் இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.