கனடாவில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் 14 பேரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
பெருந்தொகை பணமோசடி
சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்ற 37 வயதுடைய சந்தேகநபர், சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், கனடாவில் வேலை வழங்குவதாக குருநாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 14 பேரை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் 20-75 இலட்சம் ரூபா தவணை முறையில் கிடைத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பலர் இவரின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைக் கொடுத்து வேலைகளை இழந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது
இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்களிடம் போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
மேலும் அவற்றில் தூதரகத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்கள் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.