இறந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் வழங்கியதாகக் கூறப்படும் கிராம உத்தியோகத்தர் ஒருவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, தேக்கவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணம்
கைதான சந்தேக நபர் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு களுத்துறை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது இறந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் ஒன்றைத் தயாரித்து பள்ளிவாசல் ஒன்றிற்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த போலி ஆவணத்தை எடுத்துச் சென்ற பெண் ஒருவர் இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிற்கு போலி பத்திரம் ஒன்றைத் தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
விசாரணையில், குறித்த பெண்ணை தனக்குத் தெரியாது எனவும் அவர் கேட்டதையடுத்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.