ஒரு வருட காலத்தில் உலக அளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
ஆபாச உரையாடல்
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,செக்ஸ்டிங் (ஆபாச உரையாடல்) செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றுகிறார்.
உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.