யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது, நேற்று (23.06.2024) கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த டிசாந்தன் பெர்னான்டோ ( கண்ணம்மா) என்கின்ற 26 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலுக்காக சென்றிருந்த குறித்த கடற்றொழிலாளர் நேற்றுக் காலைவரை கரை திரும்பாத நிலையில் கடற்றொழிலாளர்களால் தேடுதல் பணி நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கற்பிட்டி பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான காற்று
மேலும், இந்த கடற்றொழிலாளர் தொழிலுக்கு சென்றிருந்த போது வீசிய கடுமையான காற்றின் காரணமாக ஏதாவது விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, கற்பிட்டியை சொந்த இடமாக கொண்டவரான குறித்த கடற்றொழிலாளர் மாமுனையில் திருமணமாகி வசித்து வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாமுனையிலிருந்து கற்பிட்டிக்கு கடற்றொழிலிற்காக சென்றிருந்தார் என கூறப்படுகின்றது.
மேலும், இவர் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தின் உபதலைவராகவும் வடமராட்சி கிழக்கு இளைஞர் கழக சம்மேளன உறுப்பினராகவும் இருந்துள்ளார்.