வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் வியட்நாமை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்துள்ளது.
இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளன.
அத்துடன், பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கனமழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
புயலினால் 4 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும், வேருடன் சாய்ந்த மரங்கள், இடிந்து விழுந்த மின்கம்பங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் இடம்பெறும் நிலையில், மீட்புப் பணிகளில் இராணுவம் , பொலிஸார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.