அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பெண்களை கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்குத் தள்ளியுள்ளதாக தன்னார்வு நிறுவனம் ஒன்றை கோடிட்டு காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நெருக்கடியின் சுமைகளைத் தாங்கிக்கொண்டு, உயிர்வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக ஆயிரக்கணக்கான பெண்கள் இணையம் மூலமாக தவறான விடயங்களை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் இலங்கையின் பணியாளர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன், பொருளாதார உறுதியற்ற தன்மையும் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது.
இந்தக் கொந்தளிப்புக்கு மத்தியில், பெண்கள் கடன், சுரண்டல் மற்றும் உயிர்வாழ்வு சுழற்சியில் சிக்கித் தவிப்பதாக தேசிய பெண்கள் ஒற்றுமை என்ற தன்னார்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த தன்னார்வு நிறுவனத்தின் தகவல்படி 2022 முதல் கிட்டத்தட்ட 40,000 இல்லத்தரசிகள் இணையத்தில் தவறான தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லாததால் போராடும் பல பெண்களுக்கு இது ஒரு கடைசி முயற்சியாக மாறியுள்ளது என்று தன்னார்வு நிறுவனத்தின் தலைவி, ஹஸ்னி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவது சவாலானது என்பதால், பல பெண்கள் கடன்களைப் பெறுவதற்காக நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளனர்.
நாட்டில் 2.8 மில்லியன் மக்கள் கடன் வாங்கியுள்ளதாகவும், அவர்களில் 2.4 மில்லியன் பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
துரதிர்ஸ்டவசமாக, பல பெண்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறான முடிவெடுத்துள்ளனர்.
மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைச் சந்திக்க இயலாமை காரணமாக நுண்நிதி நிறுவன அதிகாரிகளின் தவறான நடத்தைக்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் வளர்ச்சியை ஆதரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹஸ்னி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டின் பொருளாதார சரிவுக்கும், அதைத் தொடர்ந்து பெண்கள் உயிர்வாழ்வதற்கான வழிமுறையாக தவறான நடத்தைக்கு திரும்பியதற்கும், முன்னைய அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.