கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து சனிக்கிழமை (22) இரவு நடைபெற்ற 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் (IPL) அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 7 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது.
கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்திய அபார ஆற்றல்களுக்கு மத்தியில் க்ருணல் பாண்டியா தனது மிகத் திறமையான பந்துவீச்சின் மூலம் ஏற்படுத்திய திருப்பு முனை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தது.
அத்துடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது பில் சோல்ட், விராத் கோஹ்லி, அணித் தலைவர் ராஜாத் பட்டிடார் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் அணியின் வெற்றியை இலகுபடுத்தின.
இப் போட்டிக்கு முன்பதாக கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்ப விழா சிறப்பாக நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது.
முதல் ஓவரிலேயே குவின்டன் டி கொக் (4) ஆட்டம் இழந்த போதிலும் சுனில் நரேன், அணித் தலைவர் அஜின்கியா ரஹானே ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.
சுனில் நரேன் 26 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களையும் அஜின்கியா ரஹானே 31 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் பெற்று 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்னர். (109 – 3 விக்.)
மத்திய வரிசையில் அங்ரிஷ் ரகுவன்ஷி 30 ஓட்டங்களையும் ரின்கு சிங் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 16.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றயீட்டியது.
பில் சோல்ட், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
31 பந்துகளை எதிர்கொண்ட பில் சோல்ட் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களை விளாசினார்.
அவரைத் தொடர்ந்து தேவ்டத் படிக்கல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.
இந் நிலையில் விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
பட்டிடார் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் லியாம் லிவிங்ஸ்டோனும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
விராத் கோஹ்லி 36 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடனும் லியாம் லிவிங்ஸ்டோன் 5 பந்துகளில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகன்: க்ருணல் பாண்டியா