கையூட்டல் தொடர்பான சம்பவங்களில் கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் தமது அலுவலகங்களுக்கு, சுமார் 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய 721 இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 17 காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாவட்ட செயலகங்களிலிருந்தும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



















