ஏமன் நாட்டின் செங்கடல் கடற்கரையில் உள்ள முக்கியத் துறைமுக நகரமான ஹொடைடா (Hodeidah ) மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) தொடர் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்தத் தாக்குதல்கள்ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏமன் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, இஸ்ரேலிய இராணுவம், ஹவுதிகள் துறைமுகத்தைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதாகக் குற்றம் சாட்டியது.
இதைத் தொடர்ந்து, தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கும் கப்பல்களுக்கும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உள்ளூர் ஊடகமான அல் மசிரா தொலைக்காட்சியின் தகவல் படி, இஸ்ரேல் நேற்று மொத்தம் 12 தாக்குதல்களை நடத்தியது. துறைமுகத்தில் ஏற்கனவே சேதமடைந்திருந்த மூன்று கப்பல் தளங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியதாக துறைமுக வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள் ஹவுதிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹவுதிகள் இஸ்ரேலைத் தாக்கினால், “பாதுகாப்பிற்கு பல விலைகளைக் கொடுப்பார்கள்” என்று எச்சரித்துள்ளார்.
ஒக்டோபர் 2023 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்குப் பதிலடியாகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களையும் அவர்கள் குறிவைத்துத் தாக்குகின்றனர்.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் எமனில் உள்ள ஹவுதி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளைத் தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
செப்டம்பர் 10 ஆம் திகதியன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் ஈலாட் நகருக்கு அருகிலுள்ள ராமோன் விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் அகமது அல் ரஹாவி கொல்லப்பட்டார்.
இந்த தொடர் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















