கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் சேதனப் பசளை பாவனை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என மாவட்ட கம நல திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் இரசாயன உர பாவனையை தடை செய்து சேதன உரத்தினை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கொள்கைகளுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தில் வழமை போன்று 69ஆயிரம் முதல் எழுபதாயிரம் ஏக்கர் வரையான நிலப்பிரப்பில் பெரும் போகப் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிய காலத்தில் பயிருக்கு தேவையான சேதன உரம் கிடைக்காமை களை நாசினிகள் கிடைக்கப் பெறாமை காரணமாக ஏறத்தாழ 13 ஆயிரம் ஏக்கர் வரையான நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான எதுவிதமான இழப்பீடுகளும் இதுவரைக் கிடைப் பெறவில்லையென பாதிக்கப்ட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை விட அறுவடையின்போது இதற்கு முன்னைய காலங்களில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 4.3 முதல் 4.7 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைக்கப்பெற்றது என உரிய திணைக்களங்களால் தெரிவிக்கப்பட்டாலும் இம்முறை குறைந்தளவு விளைச்சல்களே கிடைத்துள்ளன.
கடந்த போகத்தில் விவசாயிகள் தங்களிடமிருந்த இராசயன உரங்களையும் சேதன உரத்தையும் பயன்படுத்தியபோதும் முன்னைய விளைச்சல்களில் மூன்றில் ஒருபகுதி விளைச்சல் கூட கிடைக்கப்ப பெறாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த உற்பத்தி தொடர்பிலான மதிப்பீடுகளில் கடந்த காலங்களில் கிடைக்கப் பெற்ற விளைச்சல் போன்று இம்முறையும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது கடந்த காலங்களில் கமநல சேவைகள் திணைக்களம் விவசாயத் திணைக்களம் மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்களம் ஆகியன இணைந்து ஒவ்வொரு போகத்திலும் மாவட்டத்தில் 65 இற்கும் குறையாத இடங்களில் மாதிரிகள் பெறபட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
வழமைபோன்று இம்முறையும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது நடைபெற்று முடிந்த பெரும் போகத்தில் 92 இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொண்டதாகவும் இதில் சேதன பசளை மாத்திரம் பயன்படுத்திய 06 இடங்களும் இராசாயன உரங்களை பயன் படுத்திய 05 இடங்களும் ஏனைய 81 இடங்களில் இருவகையான உரங்களும் பயன் படுத்தப்பட்டதாக தகவல் சேகரிக்கப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் 18 இடங்களில் கடந்த பெரும் போகங்களை விட அதிகூடிய விளைச்சல்கள் கிடைத்துள்ளதாகவும் ஏனைய இடங்களில் பெரும் பாதிப்புக்கள் இல்லையெனவும் மாவட்டத்திலுள்ள சில அதிகாரிகளால் விவசாயிகளின் பாதிப்புக்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்ட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் துறை அதிகாரிகள் விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.