தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பராகுவே. இந்நாடு பிரேசில் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது.
அந்நாட்டின் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது.
அந்த சிறைச்சாலையில் உள்நாடு மற்றும் அண்டை நாடான பிரேசில் ஆகியவற்றில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கம் அமைத்து கைதிகள் 76 பேர் (40 பிரேசில் நாட்டினர், 36 பராகுவே நாட்டினர்) தப்பிச்சென்றுள்ளனர்.
கைதிகள் தாங்கள் அமைத்த சுரங்கத்தில் எடுத்த மணலை மூட்டைகளாக கட்டி சிறையில் உள்ள ஒரு அறைக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகள் அனைவரும் பிரேசில் மற்றும் பராகுவே நாட்டில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட மிகவும் அபாயகரமானவர்கள் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறை கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுள்ளார். சிறைக்காவலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.