வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருபது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டார வன அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களையும் இன்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வன உத்தியோகத்தர் பிரனித் சுரவீர, மாவட்ட மேலதிக வன அதிகாரி எம்.ஏ.ஜாயா உட்பட வன அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.