உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 18 மாதங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் வைத்திய பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வைத்திய பரிசோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் டொக்டர் எரிக் டொனர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முதற்தடவையாக சீனா புஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுகிறது. இது உலகம் முழுவதும் 6 மாதத்திற்குள் பரவும் நிலை காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
1918 காலப்பகுதியில் இந்த ஆட்கொல்லி வைரஸ் வேகமாக பரவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயினில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து அதனால் உலகம் முழுவதும் 500 மில்லியன் பேர் வரையிலானோர் பீடிக்கப்பட்டதுடன் 50 மில்லியன் வரையானோர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தற்போதைய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு பரவினால் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அவுஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ் , சிங்கப்பூர் , ஹொங்கொங் , தாய்லாந்து , தென்கொரியா , நேபாளம் , தாய்லாந்து , தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.