ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என எந்த கட்சிக்கும் நிலையானதொரு கொள்கை கிடையாது.
நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எந்த கட்சிக்கும் அக்கறையும் இல்லை என்று விசனம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்கினேஷ்வரனுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றபோது விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதும் நாம் புதுப்புது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்நிலையில் விக்கினேஷ்வரனும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை பற்றியே பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். யாழ் மக்களைப் பற்றி மாத்திரமே பேசுகின்றனரேயன்றி நாட்டைப் பற்றி பேசுவதில்லை.
யாழில் மாத்திரமல்ல , நுவரெலியா , மாத்தளை மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் இருகின்றனர். நாடு முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
நாம் ஒன்றிணைந்தால் மாத்திரே போராட்டங்களில் வெற்றி பெற முடியும். எனவே அது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் தற்போது தோன்றியுள்ளது.
இலங்கையில் தற்போது வறுமை, போதைப் பொருள் பாவனை மற்றும் வியாபாரம், விவசாயிகளுக்கு இடப்பிரச்சினை என்பன தலைதூக்கியுள்ளன.
எனவே இரு இனத்தவராக பிரிந்தால் எவ்வாறு இவற்றுக்கு தீர்வினைக்காண முடியும்? அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் நிம்மதியாக வாழ முடியும்.
ஜனாதிபதி கட்சியொன்றின் தலைவர் அல்ல. அவர் முழு நாட்டினதும் ஜனாதிபதியாவார். அவரது தலைமையில் புதிய பாராளுமன்றம் உருவானால் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.
பதவி பிரமாணத்தின் போது ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு புதிய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றனர். பழையவர்களுடன் இணைந்து இவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
இணைந்து பயணிப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் சிங்கள தலைவர்ககளை குறை கூறிக் கொண்டிருப்பதைத் தவர வேறு எதனையும் செய்வதில்லை. வறுமை என்பது தமிழ், சிங்களம் என்றில்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகும்.
யாழிலிருப்பவர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். அரச சேவைகளிலும் இராணுவத்திலும் இணைந்து சேவையாற்ற வேண்டும். பாராளுமன்றத்துக்கு தெரிவாகி அமைச்சு பதவிகளை வகிக்க வேண்டும்.
அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்கின்றோம். அடுத்த அiமைச்சரவையில் வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான அமைச்சர்கள் அங்கத்துவம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றார்.