நடிகர் விஜய் பண்ணை வீட்டில் வருவான வரித்துறையினர் நடத்திய நிலையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக டுவிட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
இதை ஒத்து கொள்ளும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிகில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தார்.
இதனை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொண்ட வருமான வரித்துறையினர், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், நாயகன் விஜய், பிகிலின் மதுரை ஏரியாவை வாங்கி வெளியிட்ட பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர் தெரிவித்திருந்த கணக்குகள் முற்றிலும் முரண்பட்டதால் அதிரடியாக சோதனையில் இறங்கியதாக கூறப்படுகின்றது.
பிகில் படத்தின் பட்ஜெட் வசூல் குறித்த உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர். அப்போது நடிகர் விஜய்க்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அட்லிக்கு 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து 50 கோடி ரூபாய் சம்பள விவரம் உண்மைதானா ? என்பதை அறிய நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை மடக்கியது வருமானவரித்துறை.
ஜாக்குவார் காரில் படப்பிடிப்புக்கு பயணித்த நடிகர் விஜய்யை, வருமானவரித்துறையினர் அவர்களது இன்னோவா காரில் ஏற்றினர். இரு பக்கமும் அதிகாரிளுக்கு நடுவில் விஜய்யை அமரவைத்து பனையூரில் புதிதாக கட்டி உள்ள அவரது சொகுசு பங்களாவுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு செய்தியாளர்கள் தன்னை படம் பிடிப்பதை பார்த்ததும் காருக்குள் குனிந்து கொண்ட நடிகர் விஜய் முழங்கையால் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் சரியாக விஜயுடன் விசாரணை தொடங்கியது. முதலில் விஜய்யின் பண்ணை வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தினார்கள்.
அவருக்கு சொந்தமான மற்ற வீடுகளிலும் சோதனை நடந்தது. மற்ற வீடுகளில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் விஜய் அவரின் பண்ணை வீட்டில் வைத்து விசாரணை செய்தனர.
விஜய்யின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரவிலும் சோதனை தொடர்ந்த நிலையில், விஜய் வீட்டில் ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் வருமானம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை 2 வது நாளாக நீடித்து வருகின்றது.