சீனாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது வரை 722 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கத்தினால் ஆயிரக் கணக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீன ஜனாதிபதியின் செயல்பாடுகள் தொடர்பில் தற்போது வரை எந்தவிதமான தகவல்கள் வெளியாகாமல் இருப்பது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.
குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா கொடிய சாத்தான் என்றும், அதற்கு எதிராக போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்த சீன ஜனாதிபதி, இராணுவத்தினரையும் களத்தில் இறங்கி வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பின்னர் அவரின் பேச்சுக்கள் வெளியே வரவில்லை என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
குறிப்பாக, அண்மைய நாட்களாக சீனாவின் துணை ஜனாதிபதியே முன்னின்று அனைத்து விவகாரங்களையும் கையாண்டு வருவதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் முக்கிய முடிவுகள் உட்பட அனைத்தையும் சீன ஜனாதிபதி தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்துச் செயல்படுத்துவதுடன், முன்னணியில் அவரே நின்று உத்தரவுகளையும் பிறப்பித்துக் கொள்வார்.
ஆனால் சமீப நாட்களாக அவரின் கருத்துக்களோ உத்தரவுகளோ வெளிவராமல் துணை ஜனாதிபதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பது சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.