இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ராஜபக்சக்களே முழுப் பொறுப்பு. அதேவேளை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் வலைக்குள் இலங்கை சிக்கியமைக்கும் ராஜபக்சக்களே முழுக் காரணம்.
இந்த விடயங்களில் நல்லாட்சி மீது பழிபோட்டுவிட்டு ராஜபக்சக்கள் தப்பிவிட முடியாது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமை பெரும் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு. அதனால் அதில் இருந்து விலகிக்கொள்ள இலங்கை அரசு தீர்மானித்துள்ளது’ எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கையூடாகத் தெரிவித்திருந்தார்.
மஹிந்தவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ரணில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இருந்த காலப் பகுதியில்தான் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன என்று உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
அதேவேளை, 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ – மூனுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளார்.
இதன் விளைவாகவே ஐ.நா. தரப்பினர் இலங்கையில் நேரில் களமிறங்கினர். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்கள் சந்தித்து சாட்சியங்களைத் திரட்டினர்.
இலங்கையை சர்வதேசத்தின் பொறிக்குள் சிக்கவைத்து நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் ராஜபக்ச தரப்பினரே.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியதாலேயே மின்சாரக் கதிரையிலிருந்து ராஜபக்ச தரப்பினர் காப்பாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் மனதை வெல்லும் வகையிலும் சர்வதேச சமூகத்தை மதிக்கும் வகையிலும் நல்லாட்சியில் நாம் செயற்பட்டோம். ஆனால், இந்த இரண்டு தரப்பையும் அவமதிக்கும் வகையில் ராஜபக்சவினர் தற்போது செயற்படுகின்றனர். அதனால்தான் சர்வதேசம் இன்று இலங்கையை இறுக்கிப்பிடிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.