சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு திங்களன்று காட்டு விலங்குகளின் நுகர்வு மற்றும் அனைத்து விதமான விற்பனையையும் தடைசெய்யும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது,
காட்டு விலங்குகளின் நுகர்வே சமீபத்திய கொரோனா அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம் என நம்பப்படும் நிலையில் சீனா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
குறித்த சட்ட திருத்தமானது தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிலைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் காட்டு விலங்குகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தடை செய்வதும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிப்பதும் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
3,000 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் காங்கிரசை கூட்டுவது என்பது நிலைக்குழுவின் பொறுப்பாகும், ஆனால் சுகாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டிற்கான அமர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
சீனா அதன் காட்டு விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இன்னும் திருத்தவில்லை, ஆனால் இந்த முன்மொழிவானது மிகவும் அத்தியாவசியமானது மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற நாட்டிற்கு உதவுவதில் அவசரமானது என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் வியாபிக்கத் தொடங்கிய நிலையில் கடந்த மாத இறுதியில் காட்டு விலங்கு நுகர்வுக்கு இடைக்கால தடை விதித்து சீன நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
சீனா உள்ளிட்ட உலகின் 35 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வியாதிக்கு இதுவரை 79,565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,569 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வியாதிக்கு இதுவரை உலகமெங்கும் 2,619 பேர் மரணமடைந்துள்ளனர்.
நேற்று ஒருநாளில் மட்டும் சீனாவில் கொரோனா வியாதிக்கு 150-கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.