கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம், ஆண்களுக்குத்தான் 65 சதவிகிதம் அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலக சுகாதார மையம் மற்றும் சீன அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து கொரோனா தாக்கும் பெண்களில் 1.7 சதவிகித பெண்கள் உயிரிழக்கும் நிலையில், கொரோனா தொற்றிய ஆண்களில் 2.8 சதவிகித ஆண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்ஸ் மற்றும் மெர்ஸ் பரவிய போதும், அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்கள்தான். ஆனால், அதிகம் ஆண்கள் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் இதற்கு காரணம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதுபோக, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமானவர்களும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்திலிருப்பதாகவும், இதய பிரச்சனைகள் உடையவர்களுக்கு கொரோனா பாதித்தால் அவர்களில் 10.5 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களில் 7.3 சதவிகிதத்தினருக்கும், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் 6 சதவிகிதத்தினருக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5.6 சதவிகிதத்தினர் மற்றும் 6.3 சதவிகித நீண்ட கால சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொரோனா பாதித்தால் உயிரிழப்பு அபாயம் உள்ளது.
இந்த ஆய்வை Worldometer என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த நேரத்தில், உலகம் முழுமையிலும் 96,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.